Thursday, 22 January 2015

மேலவளவின் வரலாறு - HISTORY OF MELAVALAVU



மேலவளவின் வரலாறு  
                 பாரியின் பறம்பு நாடு என்ற தலைப்பில் ஆசிரியர் இரா.ஜெகதீசன் கட்டுரையாக வெளியிட்டுள்ளார் அவை உங்கள் பார்வைக்கு 

                  கடைச்சங்க காலத்தில் தமிழகப் பகுதியில் ஆட்சி செய்த வேளிர்களில் ஒருவன் பாரி. இவன் கொடைப் பெருமை பெற்றவன். இதனால் கடையெழு வள்ளல்களில் ஒருவனாகப் போற்றப்படுகிறான். இவனைப் பற்றிச் சங்ககாலப் புலவர்களான கபிலர், பெருஞ்சித்திரனார், இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார், புறத்திணை நன்னாகனார், நக்கீரர், ஔவையார், மிளைக்கந்தன், முன்றுறையரையனார், பாரி மகளிர் முதலியோர் பாடியுள்ளனர். பாரியின் நெருங்கிய நண்பராகவும், அவைப் புலவராகவும் கபிலர் திகழ்ந்தார். பாரியின் நாடு பறம்பு நாடு என்றும், இதில் முன்னூறு ஊர்கள் இருந்ததாகவும் புறம் – 110&ஆம் பாடல் குறிப்பிடுகிறது. மூவேந்தர்களான சேர, சோழ, பாண்டியர்களின் படையெடுப்பால் பாரி கொல்லப்பட்டான்.
இவனது பறம்பு நாடு பற்றிப் பல கருத்து வேறுபாடுகள் உள்ளன. சிலர் சிவகங்கை மாவட்டம் பிரான்மலையே பாரியின் பறம்பு மலை என்றும், இப்பகுதியே பாரியின் பறம்புநாடு என்றும் குறிப்பிடுகின்றனர். மற்றும் சிலர் ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையத்திற்கு அருகில் உள்ள பர்கூர் மலையே பாரியின் பறம்பு மலை என்றும், இப்பகுதியே இவன் ஆட்சி செய்த பறம்பு நாடு என்றும் கருதுகின்றனர்.
பிரான்மலையே என்று கருத்துக் கூறுபவர்கள் பறம்பு மலை என்ற பெயர் பிற்காலத்தில் மருவி பிரான்மலை என்று அழைக்கப்படுகின்றது என்கின்றனர். மதுரை மாவட்டம் மேலூர் வட்டம் திருமோகூர், திருவாதவூர், மேலவளவு ஊர்க் கல்வெட்டுகள் இப்பகுதி தென்பறப்பு நாடு, வடபறப்பு நாடு ஆகிய நாட்டுப் பிரிவுகளில் இருந்ததாகக் குறிப்பிடுகின்றன. எனவே இம்மேலூரைச் சுற்றி இருந்த பகுதிகளோடு பிரான்மலை வரை பாரியின் பறம்பு நாடு பரவி இருந்தது என்று குறிப்பிடுகின்றனர். பாண்டிய மண்டலச்சதகமும் பாரியின் நாடு பாண்டிய நாட்டுப் பகுதியில் உள்ளதாகக் குறிப்பிடுகிறது என்கின்றனர்.
பிரான்மலை அடிவாரத்தில் உள்ள கொடுங்கைநாதர் கோயில் ஒரு பாடல் பெற்ற தலம். இங்குள்ள மலையை திருஞானசம்பந்தர் (கி.பி.7ஆம் நூற்றாண்டு) கொடுங்குன்றம் என்றே குறிப்பிட்டுள்ளார். பிரான்மலைக் கல்வெட்டுகளும் இவ்வூரைப் புறமலை நாட்டுக் கொடுங்குன்றம் என்றே குறிப்பிடுகின்றன. பறம்பு நாட்டுப் பிரிவு மேலூரைச் சுற்றிய பகுதியில் மட்டுமே அமைந்துள்ளதை இப்பகுதிக் கல்வெட்டுகள் சான்று காட்டுகின்றன.
பிரான்மலையில் பாரியைப் பற்றியோ, பறம்பு நாடு பற்றியோ எந்தக் குறிப்பும் காணப்படவில்லை. மேலும் பிரான்மலை பாரியின் காலத்தைச் சேர்ந்த பண்டைய ஊர் என்பதற்குச் சான்றுகள் ஏதுமில்லை. எனவே பறம்புமலை இன்றைய பிரான்மலை என்பதற்கு மாறுபட்டதாகவே உள்ளது. பர்கூர்மலைப் பகுதியை பறம்புமலைப் பகுதியாகக் கருதும் ஆய்வாளர்கள், இப்பகுதியில் உள்ள பாரியூர் என்ற ஊரின் பெயரை அடிப்படையாகக் கொண்டு தங்களது கருத்தை வெளிப்படுத்துகின்றனர். கொங்கு நாட்டுப் பிரிவுகளில் ஒன்றான ஒடுவங்க நாட்டிற்குப் பாரி ஒடுவங்க நாடு என்ற பெயர் குறிப்பிடப்பட்டுள்ளதையும், பர்கூர்மலைக்கு வடபால் பாரிஈச்சுரம் என்ற கோயில் உள்ளதாகக் கல்வெட்டுச் சான்றுகள் உள்ளதாகவும் குறிப்பிடுகின்றனர்.
இவ்வூரின் பழமைக்குச் சான்றாகத் திகழ்பவை இங்குள்ள அமரபணியீசுவரர் கோயில் கல்வெட்டுகளே. இக்கல்வெட்டுகளில் பழமையானது கி.பி. 13&ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த வீரபாண்டியனின் கல்வெட்டே. இதற்கு மேலும் இவ்வூர் பழமையான ஊர் என்பதற்குப் பண்டைய சான்றுகள் ஏதுவும் இதுவரை இங்குக் கிடைக்கவில்லை. பாரி ஒடுவங்க நாடு என மிகவும் பிற்காலத்தைச் சேர்ந்த ஒரு கல்வெட்டு மட்டுமே குறிப்பிடுகிறது.


ஒடுவங்க நாடும் பிற்காலத்தில் கொங்கு நாட்டின் எல்லையில், கி.பி. 14-ஆம் நூற்றாண்டில் உருவானதே ஆகும். பாரியூர் காஞ்சிக்கூவல் நாட்டுப் பகுதியைச் சேர்ந்ததாகவே கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. பாரி என்பதற்கு பக்கம், பாதுகாப்பு என்ற பொருளை அகராதிகள் குறிப்பிடுகின்றன. பாரிஈச்சுரம் என்ற கோயில் பற்றிச் சரியான கல்வெட்டுச் சான்றைக் கூறாமல் பொதுவாகக் கல்வெட்டுகள் கூறுகின்றன என்கின்றனர்.
சங்ககால மன்னர்களுக்குக் கோயில்கள் கட்டியதாக இதுவரை சான்றுகள் இல்லை. கொங்கு நாட்டு வரலாற்றைக் கூறும் கொங்குமண்டல சதகங்கள் பாரியின் சமகாலத்தைச் சேர்ந்த அதியமான், குமணன், ஓரி, பேகன் முதலியோர் கொங்கு நாட்டுப் பகுதியை ஆட்சி செய்ததாகக் குறிப்பிடுகின்றன. ஆனால் பாரி கொங்குப் பகுதியை ஆட்சி செய்ததாகக் குறிப்பிடவில்லை. எனவே பாரி கொங்குப் பகுதியில் ஆட்சி செய்யவில்லை என்றே கருதலாம்.


          மதுரை மாவட்டம், மேலூர் வட்டத்தில், மேலூரிலிருந்து சுமார் 11 கி.மீ தொலைவில் உள்ளது மேலவளவு என்ற ஊர். இவ்வூருக்கு மேற்கில் அழகர்மலை, முறிமலைக்குன்று, சோமகிரிக்குன்று முதலிய மலைகள் அமைந்துள்ளன. இம்மலைப் பகுதியில் விழும் மழை நீரைத் தேக்கி மாறவர்மன் சுந்தரபாண்டியன் கி.பி.1238&-ஆம் ஆண்டு ஏரியையும், அதைப் பாதுகாக்கும் விதத்தில் கலிங்கையும் கட்டிவைத்துள்ளான். இதைப் பற்றிய கல்வெட்டுச் சான்று ஒன்றும் அங்குள்ளது

மேலவளவு (Melavalavu) Photo by Nithi

 இதைத் தவிர, இந்த ஏரியின் நீர்நிர்வாகத்தைப் பற்றி கி.பி. 1415-ஆம் ஆண்டைச் சேர்ந்த விஜயநகர மன்னன் மல்லிகார்ச்சுனராயரின் மகன் விருபாக்சராயனின் கல்வெட்டு ஒன்றும் இங்குப் பொறிக்கப்பட்டுள்ளது.

இங்குள்ள கல்வெட்டுகளில் இவ்வூர் வடபறப்பு நாட்டு அழகர் திருவிடையாட்டம் பறம்பான திருநாராயணமங்கலம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி, இவ்வூரின் பழைய பெயர் பறம்பு என்றும், இது வடபறப்பு நாட்டுப் பிரிவில் அமைந்திருந்தது என்றும், இடைக்காலத்தில் (கி.பி.10-ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 14 ஆம் நூற்றாண்டு வரை) இவ்வூர் பிராமணர்களின் ஊராகவும், திருநாராயணமங்கலம் என்று பெயர்மாற்றம் பெற்றும் அழகர்கோவிலுக்குக் (திருவிடையாட்டம்) கொடை கொடுக்கப்பட்ட ஊராகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
பாண்டிய நாட்டுப் பிரிவுகளில் ஒன்று பறப்பு நாடு என்பதாகும். இந்நாட்டுப் பிரிவு இவ்வூரின் பெயரில் உருவான பெயராகக் கருதலாம். மேலூருக்கு அருகில் உள்ள பனங்காடி என்ற ஊரில் உள்ள கி.பி. 13&ஆம் நூற்றாண்டின் தொடக்ககாலக் கல்வெட்டில் பறப்பு நாடு என்றும், பின்னர் இந்நாட்டுப் பிரிவு வடபறப்பு நாடு என்றும், தென்பறப்பு நாடு என்றும் இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இதில் மேலவளவிற்குத் தெற்கே உள்ள பகுதி தென்பறப்பு நாடு என்றும், இவ்வூரும், இவ்வூருக்கு வடக்குப் பகுதியும் வடபறப்பு நாடு என்றும் பிரிக்கப்பட்டுள்ளன.



இதன்படி இந்த ஊரை மையப்படுத்தியே இந்நாட்டுப் பிரிவுகள் பிரிக்கப்பட்டுள்ளன. எனவே இந்நாட்டுப் பிரிவின் தலைநகராக இவ்வூரைக் கருதலாம். இடைக்காலத்தில் பிராமணர்களின் ஊர்கள் அனைத்தும் வளமையான ஊர்களாகவே இருந்தன. அதன் அடிப்படையில்தான் இவ்வூர் பிராமணர்களின் ஊராகவும், அழகர்கோயிலுக்குக் கொடை கொடுக்கப்பட்ட ஊராகவும் இருந்துள்ளது.
இங்குள்ள கல்வெட்டுகள் இவ்வூரின் நீர் செழுமை பற்றியும், வேளாண்மையின் வளமை பற்றியும் குறிப்பிடுவதிலிருந்து இவ்வூர் எல்லா வளமும் பெற்ற ஊராகத் திகழ்ந்துள்ளது எனக் கருதலாம். தற்போது இவ்வூரில் சுமார் 50 ஏக்கர் பரப்பளவில் சுமார் 2500 ஆண்டுகளுக்கு முற்பட்ட பெருங்கற்கால மக்களின் ஈமச்சின்னமான கல்வட்டத்துடன் கூடிய கல்பதுக்கைகள், நெடுநிலை நடுகல் முதலியவற்றைக் கட்டுரையாளர் கள ஆய்வின் போது கண்டறிந்துள்ளார்.
எனவே இவ்வூர் பண்டைய ஊர் என்பதும், பண்டைய பெயர் பறம்பு என்பதும், தொடர்ந்து வரலாற்றுச் சிறப்புப் பெற்ற ஊராகத் திகழ்ந்து வந்துள்ளதும், பாண்டிய மண்டல சதகம் பாரியின் நாடு பாண்டிய நாட்டுப் பகுதியில் உள்ளதாகக் குறிப்பிடுவதும் கொண்டு மேலவளவைச் சுற்றிய பகுதியே சங்ககால வேளிர் பாரியின் பறம்பு நாடு எனலாம். இன்றும் இவ்வூரில் உள்ள ஏரி பறம்புக் கண்மாய் என்றே அழைக்கப்படுகிறது என்பது நோக்கத்தக்கதாகும். .
மேலும் சங்ககால ஊர்களான தாண்டிக்குடி, பொருந்தல், கொடுமணல் முதலிய ஊர்கள் அகழாய்வின் மூலமாக உறுதிப்படுத்தப் பட்டுள்ளது போன்று இங்கும் அகழாய்வுகள் மேற்கொண்டால் இவ்வூரின் உண்மைத்தன்மை வெளிப்படும்.
பாரியின் பறம்பு நாடு
இரா.ஜெகதீசன்

 எங்கள் ஊரைப்பற்றி அரியவைத்த ஆசிரியர்  அவர்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றி மேலும் உங்களது ஆய்வுக் கட்டுரைகளை எதிர்பார்த்து காத்திருக்கிறோம்.

Show Comments: OR

No comments:

Post a Comment

பி.டி.எப் கோப்பாக
நீங்கள் பதிவிறக்க
இங்கு கிளிக் செய்யுங்கள்

FeedBurner will send a confirmation message:

Click the verify link in it to start your subscription

Eve Jackson 94>
test Doe 80