மேலூர்,
மதுரை மாவட்டம் மேலூரை அடுத்த மேலவளவு அருகில்
உள்ளது ஆலம்பட்டி. இந்த ஊரில் அனுமதியின்றி நாட்டுத்துப்பாக்கி வைத்திருப்பதாக
மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணனுக்கு தகவல் கிடைத்தது. இதையொட்டி அவரது
உத்தரவின்பேரில் மேலவளவு போலீசார் ஆலம்பட்டியில் விசாரணை நடத்தினர்.
இதில் அதே ஊரைச் சேர்ந்த அழகன் மகன் பூமி (வயது
30), கிருஷ்ணன் மகன் பச்சை (50) ஆகியோர் சுமார் 3 அடி நீளமுள்ள இரண்டு
நாட்டுத்துப்பாக்கிகள் வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த துப்பாக்கிகளில் பயன்படுத்துவதற்காக 24 சிறிய
அலுமினியக் குண்டுகள் வைத்து இருப்பதும் தெரியவந்தது. இந்த துப்பாக்கிகள் மற்றும்
தோட்டக்களை பறிமுதல் செய்து இவற்றை வைத்திருந்த 2 பேரையும் போலீசார் கைது
செய்தனர்.
அழகர்மலைப் பகுதியில் முயல்வேட்டை மற்றும் பறவைகளை
சுடுவதற்கு இந்த துப்பாக்கிகளை பயன்படுத்தி வந்ததாக தெரியவந்தது. அவர்களிடம்
தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஊடகம்: தினத்தந்தி
நாள்: நவம்பர் 21
நாள்: நவம்பர் 21